டில்லி

திபெத்தில் இருந்து வந்துள்ள அகதிகளை சீனா தன் ஒற்றர்களாக உபயோகப் படுத்துவதாக இந்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடான திபெத்தில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அகதிகள் பெருமளவில் தங்கி உள்ளனர்.   இங்கு இவர்களுக்கு சரியான வேலை வாய்ப்புக்கள் கிடையாது.   இவர்களைப் பற்றி இந்தியப் புலனாய்வுத் துறை விசாரணை செய்தது.    விசாரணைக்குப் பின் இவர்களில் பலரை சீனா தனது ஒற்றர்களாக பயன்படுத்துவது கண்டறியப் பட்டுள்ளது.

திபெத் அகதிகள் குடியிருப்பு

இது குறித்து இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர், “இந்தியா – சீனா எல்லையில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது.    அதனால் சீனா இந்தியாவில் உள்ள பல தகவல்களை தெரிந்துக் கொள்ள முயன்று வருகிறது.   அவற்றில் ஒன்றாக திபெத்தில் இருந்து இந்தியா வந்துள்ள அகதிகளை தங்கள் ஒற்றர்களாக நியமித்துள்ளது.    இதற்காக இந்த அகதிகளில் பல இளைஞர்களுக்கு சீனா பணம் கொடுத்துள்ளது.

இது குறித்து உடனடியாக நாங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.   விரைவில் இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அரசுக்கு அளிக்க இருக்கிறோம்.   கடந்த இரண்டு வருடங்களாகவே திபெத் அகதிகளிடம் சீனா ஆசை காட்டி பலரை தேர்ந்தெடுத்துள்ளது. அருணசலப் பிரதேசம், சிக்கிம், மற்றும் உள்ள வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பல அகதிகள் சட்ட விரோதமாக சீனா சென்று வந்துள்ளனர்.   இவர்கள் உளவறியும் பயிற்சிக்காகவே சீனா சென்று வந்துள்ளதாக சந்தேகம் உள்ளது.

இளைய தலைமுறையை சேர்ந்த பல திபெத் அகதிகள் வசதியான வாழ்க்கையை விரும்புகின்றனர்.   ஆனால் அந்த அளவுக்கு ஊதியம் தரக்கூடிய வேலை வாய்ப்புக்கள் இங்கு கிடையாது.   இதனால் இவர்களை தங்களுக்காக உளவுப் பணி புரிய வைப்பது சீனாவுக்கு எளிதாக உள்ளது.   சீனா இவர்களுக்கு கணிசமான பணம் மற்றும் இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவகளும் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.   ஆனால் இதுவரை எத்தனை அகதிகள் இது போல உளவாளிகளாக மாறி உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை” எனக் கூறி உள்ளார்.

அரசு தரப்பில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவிலை.    உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கலாம்.  நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் கூறி உள்ளார்.