சர்கார் படத்துக்கு அதிக விலையில் டிக்கெட்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

டிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.  படம் துவங்கியதில் இருந்தே  பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் கதை திருடப்பட்டது என்ற புகார் எழுந்தது.   இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.  பிறகு ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறப்புக்காட்சிகள் திரையிட.. அதாவது தினமும் ஐந்து அல்லது ஆறு காட்சிகள் திரையிட அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

அடுத்து திரையரங்க டிக்கெட் கட்டணம் குறித்த சர்ச்சை எழுந்தது. விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மிக அதிக விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர்களால் விற்கப்படும். ஆகவே  படம் வெளியான முதல் சில நாட்கள் உரிய கட்டணத்தைவிட அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் “சர்கார் படத்துக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

அதே போல சில சமூக ஆர்வலர்கள் “சர்கார் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டால்  சட்டத்தின் மூலம் தடுப்போம்” என்றார்கள்.

ஆனால் சர்கார் படத்துக்கு அதிக விலைக்குத்தான் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்டுகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்களே “ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள்” என்று வருந்தும் வீடியோ சமூகவலைதளங்களில் உலவுகின்றன.

மேலும், தஞ்சை ராணி பேரடைஸ் திரையரங்க நிர்வாகம், “சர்கார் பட வெளியீட்டின் முதல் இரு நாட்கள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டோம். அதை நாங்கள் விரும்பவில்லை” என்று வெளிப்படையாகவே சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளது. மேலும் சர்கார் படத்தை திரையிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.

சமூகஆர்வலர்களும் அரசும் என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.