முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழப்பு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
சென்னை: முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழக்க அதிகாரிகள் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. அவற்றை காண தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந் நிலையில், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்கார வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் நவம்பர் மாதம் 21ம் தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலி குட்டிகள் சுற்றி கொண்டிருந்தன.
அவற்றை மீட்ட வனத்துறை அதிகாரிகள் நவம்பர் 23ம் தேதி இரவு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந் நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு இந்த 2 குட்டிகளில் ஒரு ஆண் புலி குட்டி இறந்ததாக தகவல் பரவியது. ஆனால், இதற்கு பூங்கா அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால், 2 புலிக்குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி சில நாட்களாக உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் கடந்த 5ம் தேதியே ஒரு ஆண் புலி குட்டி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.