கார் விபத்தில் டைகர் உட்ஸ் படுகாயம் – காலில் அறுவை சிகிச்சை!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், கார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இதனால், அவருக்கு காலில் காயம்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோல்ப் விளையாட்டு வரலாற்றில் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக வலம் வரும் டைகர் உட்ஸ், 15 முக்கிய கோல்ப் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

சமீபத்தில்தான் அவர் தனது முதுகில் ஐந்தாவதாக அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த உட்ஸ் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினார்.

அவரது கார் கவிழ்ந்து, புல்வெளியில் உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் உட்ஸ் மட்டும் இருந்த நிலையில், அவர் படுகாயம் அடைந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.