டில்லி

டிக் டாக் செயலி விதிகளை மீறி பதிவிடப்பட்டுள்ள 60 லட்சம் வீடியோக்களை நீக்கி உள்ளது.

உலகெங்கும் உள்ள மக்களிடையே மிகவும் பரவி வரும் டிக் டாக் செயலி  சீனாவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயலியை இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி பயன்பாட்டாளர்கள் தங்களது நடிப்பு, ஆட்டம், பாடல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வீடியோக்களை பதிகின்றனர். அதே நேரத்தில் இத்த செயலியில் பதியப்படும் பல வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதை ஒட்டி அரசு இந்த டிக் டாக் செயலியின் இந்திய அலுவலகத்துக்கு விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த கடிதத்தில் இந்த செயலியில்  உள்ள வீடியோக்கள் பல ஆட்சேப கரமாகவும் குழந்தைகள் பார்க்கத் தகாததாகவும் இருப்பது குறித்து சுமார் 24 கேள்விகள் எழுப்பி இருந்தன. மேலும் இந்திய அரசுக்கும் கலாச்சாரத்துக்கும் இந்த வீடியோக்கள் கேடு விளைவிக்கும் படி உள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தது.

டிக் டாக் செயலியில் இந்தியப் பிரிவு இயக்குநர் சச்சின் சர்மா, “டிக் டாக் செயலியில் நாங்கள் எங்கள் பயனாளர்களின் திறமையை வெளிக்காட்டும் வீடியோவை மட்டும் வெளியிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சமுதாய கேடு  விளைவிக்கும் எவ்வகை வீடியோவும் எங்கள் செயலியில் வெளியிடக் கூடாது என விதிகளை வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் 10 முக்கிய மொழிகளில் டிக் டாக் செயல்பட்டு வருகிறது. இந்த செயலியில் சமுதாய விதிகளை மீறி பதியப்பட்டுள்ள விடீயோக்கள் குறித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் செயலியில் இருந்து இவ்வாறு பதியப்பட்ட 60  லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இனி இவ்வாறான வீடியோக்கள் பதியப்படும் போது உடனடியாக அவற்றை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.