டிக் டாக் தொடர்பு… சின்னாபின்னமான குடும்பம்..

மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாய்ஸி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் சுப்புராஜ்.  நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள மனைவிக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.  வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த சுப்புராஜுக்கு ஒரு மகளும் மகனும் உள்ள நிலையில் டிக்டாக் பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடந்துள்ளார்.
தனது மகளைப் பள்ளிக்கு விடச்செல்லும் போது, தனது மகளின் தோழியின் தாயான வில்லுப்பாட்டு பாடும் பிரேமா என்ற பெண்ணுடன் சுப்புராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அப்போது இருவரும் டிக்டாக் குறித்துப் பேச அந்த பெண் தானும் டிக்டாக்கில் இருப்பதாகக் கூறி சில வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நட்பு அதிகமானது.  கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பிரேமாவுக்கு, சுப்புராஜ் ஆதரவு கரம் நீட்ட இருவரும் குழந்தைகளைப் பள்ளியில் விட்ட பிறகு யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
தமிழ் படிக்கத் தெரியாத மனைவி ஜாய்ஸை எப்படியோ ஏமாற்றி, மனைவி பெயரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார்..  இதன் பிறகு  குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டு டிக்டாக் பெண்ணே கதி என்று கிடந்துள்ளார்.
நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்த ஜாய்ஸி தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து விசாரித்த பின்னர் தான், ஜாய்ஸி பெயரில் உள்ள வீட்டையும் சுப்புராஜ் ஏமாற்றி எழுதி வாங்கிச்சென்றது தெரியவந்தது.  மேலும் டிக்டாக் காதலியுடன், கன்னியாகுமரி மாவட்டம் வல்லம் பகுதியில் சுப்புராஜ் குடித்தனம் நடத்திவருவது தெரிந்து அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்திலும், பின்னர் வீரவநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் ஜாய்ஸி.

ஆனால் ஊரடங்கைக் காரணம் காட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.  இதற்கிடையே தன் கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் தனது மனைவியின் புகைப்படத்தை முகநூலில் விலைமகள் என்று அவரது மொபைல் எண்ணுடன் பதிவிட்டுள்ளார் சுப்புராஜ்.
இது குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்தும் புகார் அளித்துள்ளார் ஜாய்ஸி.  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கணவனை மீட்டுத்தருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அந்த அப்பாவி மனைவி.
– லெட்சுமி பிரியா