கொரோனா நிதியாக 250 மில்லியன் டாலரை பிரபல இசைவீடியோ சமூக வலைதளமான டிக்டாக் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

உலகம் முழுவதும்  200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் உள்பட உலக நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன.

இந்த நிலையில், டிக்டாக் இணையதளம் 250 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக அறிவித்து உள்ளது.

இந்த நிதியில்,  150 மில்லியன் டாலர் நிதி, மருத்துவ பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

மீதமுள்ள 100 மில்லியன் டாலர் நிதியில், 40 மில்லியன் டாலர், டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10 மில்லியன் டாலர் நிதி  ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு  வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

மீதமுள்ள  50 மில்லியன் டாலர் உலகெங்கிலும் தொலைதூர கற்றல் முயற்சிகளை ஆதரிக்க “படைப்பு கற்றல் நிதிக்கு” பயன்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இசை வீடியோக்களுக்கு பிரபலமான டிக்டாக், சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்படும் சமூக தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. டிக்டாக் மார்ச் மாதத்தில் உலகளவில் 65 மில்லியன் பதிவிறக்கங்களைக் கண்டது. இதை பகுப்பாய்வு தளமான சென்சார் டவர் (SensorTower) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.