ன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து தங்களது வாழ்க்கைகைய நரகமாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக மொபைல் முலம் இணையத்தளத்தை காணும் கோடிக்கணக்கானோர் அதில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு  செயலி(app)களை உபயோகப் படுத்தி, தங்களை அந்த செயலிக்கு அடிமையாக்கி கொள்கின்றனர்.

இந்த செயலிகளின் பிரபலமான டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி. இது தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதாக இருந்தது. ஆனால், நாளடைவில், பாட்டு என்ற பெயரில் பலதை பதிவேற்றி, அதை துஷ்பிரயோகத்துக்கும், பாலியல் ரீதியான அங்க அசைவுகளுக்குமே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இதன் காரணமாக, டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று குரல் ஒலிக்க தொடங்கி உளளது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளும், சமூகச் செயலிகளில் வரும் காணொளி களும் நாம் நினைப்பதற்கு மாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  உண்மையில் சமூக வலைத்தளங்களும், சமூகச்  செயலிகளும் சமூகத்திற்கு உரிய பலனைத் தருகின்றனவா?

பிரபல மனநல மருத்துவர் திரு.இராமனுஜம் ( மனநல மருத்துவர் & இணை பேராசிரியர்,  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி)  பதில் தருகிறார்.

நமது செய்தியாளரின் கேள்விக்கு மருத்துவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு….

டிக் டாக் செயலி தடை செய்யப்படவேண்டுமா ?

எந்த ஒரு செயலியும்  உண்மையில் பயனளிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். கத்தியை வைத்து காய்கறியையும் நறுக்கலாம், கழுத்தையும் வெட்டலாம். அதேபோலத்தான் சமூக வலைத்தளங் களும் ,செயலிகளும். அதேவேளை, எந்தவொன்றும் எல்லை மீறும்போது நிச்சயம் கட்டுப் படுத்தியே ஆகவேண்டும். நிச்சயமாக சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்துப் பயனாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஒருவேளை டிக்டாக் ஐ தடை செய்தால் நிச்சயம் அது வேறு பெயரில் வரும்.

டிக்டாக்கில் வரம்பு மீறிய சில காணொளிகளைப் பார்க்கும்போது …மனநல மருத்துவராக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

அடையாளச் சிக்கலும், அங்கீகாரமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மற்றவர்களுக்குக் கிடைக்கும் /கிடைத்த அடையாளம் தமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும்,   சிலர் தங்கள் திறமையை அங்கீகரிப்பதில்லையே என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு  மனம் போன போக்கில் பயணிப்பது ஒரு காரணம்.

சமூக வலைத் தளங்கள் வந்த பின்னர் ஒருவரின் பதிவுக்கோ,  காணொளிக்கோ  உடனடி  விருப்பக் குறிகளின் எண்ணிக்கை (லைக்ஸ்) மூலம் கிடைக்கம் அடையாளத்தைத்  தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே பலரும் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

குறிப்பாக,  எது உடனுக்குடன் பலன்கொடுக்கிறதோ  அதற்கு மனிதன்உடனே அடிமையாகி விடுகிறான். நேர் வழியில் பயணித்தால் முறையான அங்கீகாரம் பெற  நெடுங்காலமாகலாம். தீவிரமான திட்டமிடலும், உழைப்பும் தேவைப்படலாம்

.  சமூகச் செயலிகளில் நாம் பதிவிட்ட அடுத்த விநாடியே கூட அவை நமக்கான அங்கீகாரத்தைக் கொடுத்து விடுவதாக  பலரும் நினைக்கிறார்கள். எனவே மக்களின் பார்வை அந்தப் பக்கமாய்த் திரும்புவது இயல்புதான்.

புகழ்பெற்ற பொன்மொழி ஒன்று ’’Everybody wants his own 15 minutes of fame” , 15 நிமிடம் புகழ்  அனைவருக்கும்  இருக்கும், அதன்பிறகு உலகம் அவர்களை மறந்துவிடும் என்பதை உலகம் மறந்துவிடுகிறது. அந்த 15 நிமிடப் புகழ் தம் மீதும் படவேண்டும் என்று நினைத்துச் செய்யும் செயல் இது என்று கூறலாம்.

அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அவர்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதும்,  அல்லது எந்த துறையில் தம்மால் சாதிக்க இயலும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாததும் காரணம் எனலாம்,

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள செய்திகள் இந்தியத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

பேஸ்புக்- கேம்பிரிட்ஜ் அனலடிகா பிரச்னையை நாம் மனதில் கொள்ளவேண்டும். சமூக வலை தளங்களில் உள்ள கருத்துச் சுதந்திரம் அவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே எழுதி விடு கிறார்கள்.  அதை இவர் சொன்னார் என்று பொத்தாம்பொதுவாக சொன்னாலும் கருத்து என்பது அவருக்குப் பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான். ஒருவரை நேரில் பார்த்தால் கூட நாம் அவ்வளவு திட்டமாட்டார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களில் எப்படி எல்லாம் திட்டி எழுது கிறார்கள்.  அவர்களுக்குத் தணிக்கையும் கிடையாது.

உதாரணமாகச் செய்தித்தாள்களில் ஏதேனும் செய்திகள் வரவேண்டுமானால் நிச்சயம் பல கட்டங்களைத் தாண்டி செய்திகள்  இறுதியாக ஆசிரியர் குழுவின் தணிக்கைக்குப் பின்னரே வெளியிடப்படுகிறது, ஆனால் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு எந்தத் தணிக்கை யும் கிடையாது.

ஒருவேளை பத்திரிக்கைகளில் செய்திகள் தவறாக வந்தால் , அடுத்த நாள்  தவறுக்கு நிச்சயம்  வருத்தம் தெரிவிப்பார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதி விட்டபின் அவர் நிச்சயம் மறுப்பு வெளியிடுவாரா என்பதை  நம்மால் உறுதி செய்ய வியலாது. எனவே இதுபோன்ற காரணங்கள் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.  அதே சமயம் சமூக வலைத்தளங்கள் உள்ள கருத்துகளில் பல, சமூகம் சார்ந்தவை என்பதையும் மறக்கக்கூடாது.

மக்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கும்போது, அதை மேலும் தூண்டிவிடும் வகையில் எந்த செய்தி வந்தாலும் மக்கள் உடனே நம்பிவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் ஒரு பொய்யான செய்தியைப் பரப்பினால் உடனடியாக அது எல்லாரிடமும் சென்று சேரும். ஏனெனில் இயல்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கவில்லை மாறாக நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதையே பார்க்கிறோம்

சமூக வலைத்தளங்களுக்கும், சமூகச் செயலிகளுக்கும் அடிமையானவர்களை மீட்பது எப்படி?

குறிப்பாக, சமூக வலைத்தளங்களுக்கும், சமூகச் செயலிகளுக்கும் அடிமையாகிறவர்கள் சிறுவர்-சிறுமிகள் மற்றும் இளையர்கள். தமிழில் அழகான பழமொழி ஒன்று உள்ளது ’’ வரும்முன் காப்பதே சிறந்தது ’’ மூன்று வயதிலேயே செல்பேசியைக் குழந்தைகளிடம் கொடுத்துவிட்டால் அவர்களை 30 வயதில் கட்டுப்படுத்துவது கடினம், பெற்றோர் குழந்தைகளுக்குச் செல்பேசியைக் கொடுப்பதாக இருந்தாலும் பெற்றோர் கட்டுப்பாடு உள்ள மாதிரியான செயலிகளை நிறுவிக் கொண்டு குறிப்பிட்ட நேரம் சென்றவுடன் தானாகவே அனைத்தையும் நிறுத்திவிடவேண்டும்.

செல்பேசி கொடுக்கும் ஒரு மகிழ்ச்சியை அதேபோன்று மகிழ்ச்சியைக் கொடுக்கும் வேறு விசயத்திற்கு நாம் மடைமாற்றும் செய்யவேண்டும்.செல்பேசி கேட்டால் கொடுப்பதற்குப் பதிலாகப் பெற்றோர் அவர்களை  வெளியே  கூட்டிப்போகலாம் அதுவே பெரியவர்கள் என்றால் இசையைக் கேட்கச்சொல்வதோ அல்லது புத்தகம் படிக்க , எழுதச் சொல்வது, குழுவாக விளையாடுவது போன்ற செயல்களைச் செய்யலாம், எப்படியிருந்தாலும் வரும்முன் காப்பது சிறந்தது

தொழில்நுட்பத்தால் நிறையப் பேருக்கு மனவுளைச்சல் உட்பட பல சிக்கல்கள் ஏற்படுகின்றனவே?

முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா?  என்பது போன்ற கேள்விதான் இது,

தொழில்நுட்பத்தால் மனவுளைச்சலிலிருந்து வெளிவந்தவர்களும் இருக்கிறார்கள், தொழில் நுட்பத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானவர்களையும் பார்த்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்வது நாம் ஆர்வத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றவேண்டும்,  தொழில்நுட்பங்களுக்கு மாற்றாகப் புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் பேசுவது, இசை கற்றுக்கொள்வது போன்று செய்யலாம். பொழுது போக்குவதற்கு நிறையப் பயனுள்ள விசயங்களைச் செய்யலாம், ஊரில் உள்ள குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லித்தரலாம் தொடர்ச்சியாகப் பொழுதுபோக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது  மேலும் மனவுளைச்சலைக் கொண்டுவரும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும், சுய கட்டுப்பாடு மிக அவசியம்.

டிக்டாக் போன்ற செயலிகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உங்கள் யோசனைகள்….?

தமிழில் உள்ள  புத்தகங்கள், சிறப்பம்சங்கள், புத்தக விமர்சனங்கள் என தங்களுக்கு உள்ள அறிவைக்கொண்டு 15 விநாடிகளில் ஒரு காணொளியாகக் கொடுக்கலாம், இசையைச் சொல்லி தருபவர்கள் இசையைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கலாம். ஒரு குழுவாக இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செய்தால் நம்மைப்பார்த்து மற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வமாகச் சொல்லிக்கொடுப்பார்கள், இப்படிச் செய்தால் அது ஓர் ஆக்கபூர்வமான செயலியாக, செயலாக மாறும்.

சந்திப்பு: செல்வமுரளி