மதுரை:

டிக் டாக் போலியான ஐடி மூலம், இளைஞரை ஏமாற்றி  ரூ. 97 ஆயிரம் வரை பணம் வசூலித்த திருப்பூர் இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக்டாக் மோகம் இன்றைய இளைஞர்கள், குமரிகளை மட்டுமில்லாமல், குழந்தைகள் முதல் கிழவிகள் வரை அனைத்து தரப்பினரையும்  ஆட்டிப்படைக்கிறது. தினந்தோறும் புதுமையாக எதையாவது  செய்து, அதை டிக்டாக்கில் பதிவேற்றி அதன்மூலம் ஆனந்தம் பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், அதன்மூலம் தில்லுமுல்லுகளும் அதிகரித்து வருகிறது.
மதுரை எல்லிஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற 24 வயது இளைஞர்,  டிக்டாக் மோகத்துக்கு அடிமையானவர். இவருடன் டிக்டாக் மூலம் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் அம்முகுட்டி என்பவர்  அறிமுகமாகி உள்ளார். இருவரும் டிக்டாக் முலம் பழகி வந்த நிலையில், இளம்பெண் அம்முகுட்டி  அறிவுறுத்தல்படி அவரது வங்கிக்கணக்குக்கு ராமச்சந்திரன் பல முறை பணம் அனுப்பி உள்ளார். இதுவரை  ரூ.97 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில், அம்முகுட்டி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன், அவரது ஐடி குறித்து தீவிரமாக ஆராய்ந்ததில், அம்முகுட்டி என்பது போலி ஐடி என்பது தெரிய வந்ததுள்ளது.
இதுதொடர்பாக ராமச்சந்திரன் மதுரை எஸ் எஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது,  அம்முகுட்டி என்பவரின் இயற்பெயர் சுசி என்பது தெரிய வந்துள்ளது. அவரது டிக்டாக் மற்றும், முகநூல் பக்கம் போலியானது என்பதை தெரிந்துகொண்ட  காவல்துறையினர்,  அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
இளம்பெண் சுசியின்  சொந்த ஊரான திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி கிராமத்தில் தனது வீட்டில் இருந்த அவரை  காவலர்கள் கைது செய்தனர்.  அவரிடம் இருந்த  விலையுயர்ந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுசி அதற்கு டிக் டாக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி பலரிடம் இதுபோன்று மோசடி செய்துள்ளது தெரியவந்ததுள்ளது.