டில்லி

நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடனை திருப்பித் தரவில்லை எனில் வாராக்கடன் பட்டியலில் வரும் 2020 மார்ச் வரை சேர்க்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் பல பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.   பல சிறு மற்றும் குறும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.   இதனால் வேலை இல்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது.    இந்த நிலையை மாற்ற மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டில்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “தற்போது இந்தியாவில் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் மற்றும் தேவை மிகவும் குறைந்துள்ளது.   இந்த நிலை மாற வங்கிக் கடன்கள் அதிக அளவில் வழங்கப்பட வேண்டும்.

நான் ஏற்கனவே இது குறித்து வங்கிகளுடன் கலந்தாலோசித்துள்ளேன்.    வங்கிகளுடன் இணைந்து தனியார் நிதி நிறுவனங்களும் பொது மக்களுக்குக் கடன் வழங்குவதில் செயல்பட்டு வருகின்றன.    இவையும் சிறு மற்றும் குறும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும்.

வரும் 2020 மார்ச் மாதம் வரை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது.   இதை நான் வங்கிகளுக்கும் தெரிவித்துள்ளேன்.   நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.