சென்னை: நாளை முதல் அத்யாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள்  காலை 6 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைகளும், மருந்தகங்களும் மட்டுமே இயங்குகின்றன. அவைகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே இயங்குகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.

தற்போது அதற்கான நேரக்கட்டுப்பாட்டில் மாற்றம் செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவை, அத்யாவசிய பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே ஆகும். ஏற்கனவே  பிற்பகல் 2.30 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் கடைகளை காலை 6 மணி முதல் திறந்து வைக்கலாம். மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.