புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ரத்துச‍ெய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே.

மேலும், அமலில் உள்ள விதிமுறைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயணச்சீட்டை ரத்துசெய்ய நேரடியாக கவுன்டருக்கு வந்து நீண்டநேரம் காத்திருக்கத் தேவையில்லை. அதற்கான கால அவகாசம் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 15ம் தேதிவரை ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் 45 நாட்களுக்குள் தங்களது பயணச்சீட்டை ஒப்படைத்துவிட்டு கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து, ரயில்வே சார்பாக ரத்து செய்யாமல், பயணியே தனது பயணத்தை ரத்து செய்தால் 30 நாட்களுக்குள் பயணச்சீட்டிற்கான பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது, தற்போது 3 நாட்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எண் ‘139’ மூலம் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கும் 30 நாட்களுக்குள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதேநேரம், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திரும்பப்பெற தற்போதைய விதிமுறைகளே கடைபிடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதவிர, ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டை ரூ.10 என்பதிலிருந்து ரூ.50 வரை உயர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.