திமுகவில் மாற்றம் வரும் நேரம் வந்து விட்டது : மு க அழகிரி

திண்டுக்கல்

திமுகவில் மாற்றம் கொண்டு வரும் நேரம் வந்து விட்டதாக முக அழகிரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் மூத்த மகன் மு க அழகிரி கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்தார். மு கருணாநிதியின் மறைவுக்குப் பின் அவர் இரண்டாவது மகன் முக ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். மு க அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தும் திமுக தலைமை அவரைக் கண்டுக் கொள்ளவில்லை.

திமுக தலைவர் கருணாநிதிக்கு திண்டுக்கல்லில் நடந்த புகழஞ்சலி கூட்டத்தில் மு க அழகிரி, “மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கியவர் மு கருணாநிதி. அவரிடம் இருந்து நான் சுயமரியாதை மற்றும் உழைப்பை கற்றுக் கொண்டேன். நான் திருமங்கலம் தொகுதியில் எந்த அளவுக்கு உழைத்தேன் என்பது உங்களுக்கு தெரியும்.

கருணாநிதி என்னை திமுகவில் இருந்து வெளியேற்றவில்லை. நான் திமுக தொண்டர்களுக்காக பேசியதால் என்னை சில சதிகரர்கள் வெளியேற்றி உள்ளனர். தற்போது பதவிக்காகவே சிலர் மு க ஸ்டாலினுடன் செல்கின்றனர். ஸ்டாலின் முகாமில் உள்ளவர்கள் அனைவ்ரும் பதவி ஆசை பிடித்தவர்கள்.

நாம் எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை தேர்தல் வரும் போது தெரிவிக்கிறேன். அது வரையில் காத்திருங்கள். திமுகவில் மாற்றம் கொண்டு வரும் நேரம் தற்போது வந்துள்ளது” என உரையாற்றினார். மு க அழகிரியின் இந்த பேச்சு திமுகவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.