திண்டிவனம்:  பாமக சார்பில்   நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதப்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.  இதையடுத்து நூற்றுக்கும்  மேற்பட்டோர் திருச்சியில் ரயில் மறியலில் ஈடுப்பட்டனர். நாமக்கல் ரயில் நிலையத்திலும் மறியலில் ஈடுபட்ட பா.ம.கவினர் கரூரில் இருந்து சேலத்திற்கு சென்ற பயணிகள் ரயிலை மறித்தனர்.

திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ரயில் மீது ஏறி அக்கட்சி தொண்டர் ஒருவர் முழக்கமிட்டபடியே இருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவிர இச் சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதனால் போராட்டக்களத்தில் கூடுதல் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டு இருக்கிறது.