Random image

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ்

ரஜினி கட்சிக்கு எம் ஜி ஆர் டிப்ஸ்.

நன்றி : நூருல்லா ஆர்.  ஊடகன்   – 9655578786

 அனைத்திந்திய மக்கள் சக்திக் கழகம்” என்ற பெயரில் 2018- ஆம் ஆண்டு ஒரு அரசியல் கட்சியை தொடங்க ரஜினி ரசிகர் மன்றத்து உறுப்பினர்கள் சிலர் ஏற்பாடு செய்தனர். படிப்படியான  நடைமுறைகள் பூர்த்தியான பின்  இக்கட்சிக்கான  பதிவு எண்ணைத் தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது .

காதோடு காது வைத்ததுபோல இக்கட்சியின் பெயர் திடீரென்று, “மக்கள் சேவைக் கட்சி” என மாற்றப்பட்டது. அதற்கான அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கும் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆணையமும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது. அத்தோடு மட்டுமல்ல., பொதுவெளியில் பரவலாக அறியப்பட்ட ஆட்டோ சின்னமும்  வழங்கித் தேர்தல் ஆணையம்  பகிரங்க பிரகடனம் செய்து விட்டது.

ரஜினி ரசிகர் மன்றத்தின் சாதாரண தொண்டன் தொடங்கிய இக்கட்சியில் தான் ரஜினி சேரப் போகிறார் என்று செய்திகள் கசிகின்றன.

பாட்ஷா படத்தின் மூலமாக ஆட்டோக் காரனாக ரசிகர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரும் முத்திரைச் செல்வாக்குப் பெற்றிருக்கும் அவர், அதே ஆட்டோ சின்னத்தில் தான் தேர்தல் களமாடவேண்டும் என்ற கனவில் இருந்தார். இந்தக் கனவுக்குக் காட்சி வடிவம் கிடைக்கின்ற வகையில் தான் ஆட்டோ சின்னத்துடன் கூடிய மக்கள் சேவை கட்சியில்  இணையப் போகிறார் என்று பரபரப்பாகச் செய்திகள் அடிபடுகின்றன.

எம்ஜிஆர் மறைவு நாளில்(24 டிசம்பர்)இந்த தகவலை அலசும்போது எம்ஜிஆர்  வாழ்வின் முத்திரையே தற்போது ரஜினிக்கும் பொருந்தி வரும் போல… ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுவாரஸ்யமே தென்படுகிறது.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், தனிக்கட்சித் தொடங்கி ‘அண்ணா திமுக” என்று பெயர் வைத்து,  நெற்றியை நிமிர்த்தும் அளவுக்கான அசைக்க முடியாத வெற்றிச் சக்தியாக அதனை வளர்த்துக்  காட்டினார்.

பல்வேறு பொதுக் கூட்டங்களில் இந்த கட்சி பற்றிய ஒரு கருத்தை அடிக்கடி  பதிவு செய்திருக்கிறார்.

உலகக் குத்துச்சண்டை சாம்பியனான முகமதலி பலமுறை பொதுமேடைகளில் பேசியபோது, “நான் ஜெயித்துக் கொண்டே இருப்பேன்” என்பது வழக்கம். அதேபோன்றுதான் எம்ஜிஆரும்., ஒரு சில சரிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் அவரும் கூட தன் வாழ்வின் இறுதிக் கட்டம் வரையிலும் ஜெயித்துக்கொண்டே  இருந்தார்.

“படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என காமராஜர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரே 1967ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தோற்றுப் போனார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சட்டக் கல்வி மாணவர் பெ சீனிவாசன் அபார வெற்றி பெற்றுவிட்டார்.  அவரின் சாதனைக்கு மகுடம் சூட்டும் வகையில் அவருக்குத் துணை சபாநாயகர் பதவி கொடுத்து கவுரவித்தார் அண்ணா.  “படுத்துக்கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர் தான்”  அப்போது எம் ஆர் ராதாவால்  துப்பாக்கியால் சுடப்பட்டு, குண்டடிபட்ட கழுத்துக் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எம்ஜிஆர்.

மருத்துவ மனைக் கோலத்தில் தான் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுகவை ஆளும் கட்சியாக மாற்றி ஏற்றியவர் அண்ணா. 1967 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது முதல் அமைச்சர் பதவியில் அண்ணா அமர்ந்தார். அத்தருணத்தில் புகழேணியின் உச்சியில் இருந்தார் அண்ணா.  அந்தப் புகழின் உச்சபட்ச வளர்ச்சி சரிவதற்கு முன்னதாகவே அவர் முதலமைச்சர் என்ற தகுதியுடனேயே இறந்து போனார். அதேபோன்றுதான் எம்ஜிஆரும் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்தவாறு உச்சபட்ச புகழ் மங்கும் முன்பே  மறைவை எய்திவிட்டார்.

இறப்பிலும் அவர் அண்ணா வழிதான். எம்ஜிஆரின் மறைவு நாளில் அந்த நினைவுகளை நீவிப் பார்ப்பதில் ஒரு ஆறுதல்.

எம்ஜிஆரின் நூற்றுக்கணக்கான அரசியல் மற்றும் அரசு விழாக் கூட்டங்களில் தினமலர் செய்தியாளனாக நான் கலந்துகொண்டு செய்திகளைச்  சேகரித்து எழுதியிருக்கிறேன். அத்தகைய சில  பொதுக்கூட்டங்களில்  பேசிய எம்ஜிஆர், “மிகச் சாதாரண தொண்டன்  தான் அண்ணா திமுகவைத் தொடங்கினார். அந்தக் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். அக்கட்சியின் பெயர் தான் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று அழுத்தந் திருத்தமாகத் தெரிவித்த தகவலை நான் பலமுறை தினமலரில் பதிவு செய்திருக்கிறேன்.

” தொண்டன் தொடங்கிய கட்சியில் தலைவன் இணைவது” என்ற  கோட்பாட்டை எம்ஜிஆர் அறிமுகம் செய்தார். ரஜினி அதை டிப்ஸ் என ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறார்.

சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் எம்ஜிஆர் இணைந்தார் அல்லவா? அவர் தெரிவித்திருந்த அந்த சாதாரண தொண்டர் பெயர் அனகாபுத்தூர் ராமலிங்கம்.

எனக்கு மிக நெருக்கமான நண்பரான அவர் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதுண்டு. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் அடிக்கடி அமர்ந்து அரசியல் கலந்தாய்வு நடத்தி… என்னோடு நேச நெருக்கத்தோடு பழகி வந்தார். 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கத்தின் எழுச்சிகரமான முன்னேற்றத்திற்கு அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அது சார்ந்த பல்வேறு செய்திகளை என்னிடம் தெரிவித்து, நாளிதழ்களில் வரவழைப்பதற்காக உதவியையும் என்னிடம் அவர் வேண்டி இருக்கிறார். நானும் செய்திருக்கிறேன்.

எம்ஜிஆர் தன்னைப் பற்றி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிப் பேசும் அனகாபுத்தூர் ராமலிங்கம், மிகுந்த பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்வது வழக்கம்.

தன்னைப்  பெருந்தன்மையோடு சேர்த்துக்கொண்ட தொண்டன் அனகாபுத்தூர் ராமலிங்கத்துக்கு எம்ஜிஆர் வழங்கிய  வரங்கள் ஏராளம்.

சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார். கைத்தறித்துறை ஆலோசனைக்குழு பொறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தினார். மேடைகள் தோறும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தின் பெயரைச்சொல்லி, அவருக்கான முக்கியத்துவத்தை அடையாளம் காட்டிக் கொண்டே இருந்தார்… என்றவாறு எம்ஜிஆர்  வழங்கிய வாய்ப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனி ரஜினிகாந்த் இத்தகு தொண்டர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை இனிவரும் ஜனநாயகக் கள விளையாட்டின் போது தான் காண முடியும்.