Random image

உதவுங்களேன்…

றுமை கொடிது.

அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.

அப்படித்தான் தவிதவித்து நின்றது கூலித்தொழிலாளி முனுசாமியின் குடும்பம்.

கடந்த சனிக்கிழமை காலை,  ஐஸ்வர்யா என்கிற ஐ.டி. நிறுவன ஊழியர், முழு போதையில் தனது காரை  தாறுமாறாக ஓட்டி  சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த முனுசாமி மீது மோதி, கொன்றுவிட்டார்.

திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த 45 வயதான முனுசாமிக்கு கோவிந்தம்மாள் என்கிற மனைவி,  ப்ளஸ் ஒன் படிக்கும் கார்த்தி 7வது படிககும்  திவ்யா என்று இரு குழந்தைகள்.  திருவான்மியூரி்ல் இருக்கும் மாநகராட்சி பள்ளியில் படிக்கிறார்கள்.

முனுசாமிக்கு இன்ன வேலைதான் என்று கிடையாது. கட்டிட வேலைக்குப் போவார், பாரம் சுமப்பார், பெயிண்டர் வேலை பார்ப்பார், இப்போது இருந்திருந்தாரானால் நீங்கள் அழைக்கும் ஏதோ ஒரு வேலைக்குக்கூட ஓடி வருவார். தினம் தினம் உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர் அவர்.

குடும்பத்தைத் தாங்கிய அந்தத் தூணைத்தான், ஐஸ்வர்யாவுக்குள் இருந்த போதை மிருகம் காரேற்றி துள்ளத் துடிக்க கொன்றுபோட்டது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் நம்மிடம் மெல்ல பேசுகிறார்  முனுசாமியின் மனைவி கோவிந்தம்மாள்:

“உடம்பு முடியாதவ நான். அதோட நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி ஏதோ நாலு காசு  கொண்டு வருவேன். அது உப்பு, மிளகாய்க்குக்கூட ஆகாது.

என் வீட்டுக்காரருதான் குடும்ப பாரத்தையே தாங்குனாரு. ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டாரு. பகல்ல ஏதாவது கூலி வேலைக்குப் போய்ட்டு ஓய்ஞ்சு போயி வருவாரு. சில சமயம் ராத்திரி கட்டிட வேலை இருக்குன்னு யாராவது கூப்பிட்டா அப்படியே எந்திரிச்சு ஓடுவாரு.

“ஏன் இப்படி ராப்பலா உழைக்கிறீங்க.. ஒடம்பு என்னத்துக்கு ஆவுறதுன்னு நான் சத்தம் போட்டா, “சும்மாரு புள்ள.. நாந்தான் படிக்காம இப்படி அல்லாடுறேன். எப்பாடு பட்டாவது நம்ம புள்ளைங்கள நல்லா படிக்க வச்சிரணும்.  அதுங்க நல்ல வேலைக்கு போகணும். அதுக்குத்தான்  இப்படி உழைக்கிறேன்”னு சொல்லுவாரு.

குடும்ப நிலவரத்தை தெரிஞ்சி பிள்ளைங்களும் கருத்தா படிப்பாங்க. ஆனா இப்போ அவங்க படிப்புக்கும் ஆபத்தா போச்சு.

ப்ளஸ் ஒன் படிக்கிற மகன் கார்த்தி, படிப்ப விட்டுட்டு  ஏதாவது கூலி வேலைக்கு போறேங்கிறான்” என்ற கோவிந்தம்மா அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

முனுசாமியின் குடும்பம்
முனுசாமியின் குடும்பம்

முனுசாமியின் நண்பர் நாராயணனிடம் பேசினோம். அவர், “முனுசாமிக்கு தன் புள்ளைங்க ரெண்டுபேரையும் நல்லா படிக்கவைக்கணும்கிறதுதாங்க கனவு. வேலைக்கு போறப்ப சில இடத்துல சாப்பாட்டுக்கு தனியா காசு கொடுப்பாங்க. ஒரு பன்னும் டீயும் குடிச்சிட்டு அந்த காசையும் கொண்டுபோயி வீட்ல கொடுத்திருவாரு.

கேட்டா, “நாலு நாளைக்கு இப்படி நம்ம வயிற காயபோட்டா, புள்ளைங்க படிப்புக்கு தேவைப்படுற நோட்டோ புக்கோ வாங்கலாம்ல”னு சொல்லுவாரு…   இப்போ அவரோட  புள்ளைங்க  படிப்ப நிறுத்தப்போறத நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு” என்றார் கண் கலங்க.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். அது அடுத்தவர் குடியாகவும் இருக்கும் என்பதற்கு சோக சாட்சியாக நிற்கிறார்கள் முனுசாமியின் மகன் கார்த்தியும், மகள் திவ்யாவும்.

ஆமாம்… எதிர்காலம் குறித்த கேள்வியுடன் நம்முன் நிற்கிறார்கள்.

அந்த இளந்தர்களின் கல்விக்கு  உதவுங்களேன்….

ஒரு அப்பாவி தகப்பனின்  கனவும் மெய்ப்படட்டும்.

அவர்களது வங்கி கணக்கு எண்:

M Divya and   M Govindammal
AC No: 6367061837
Bank: Indian Bank
IFSC Code: IDIB000T044

கார்த்தி, திவ்யாவுடன் பேசி ஆறுதல் சொல்ல…

 8939500075