பெங்களூரு:

திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி, கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரும், திப்புசுல்தான் வாரிசுமான சஹாப்சதா மன்சூர் திப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில், ‘‘எனது மூதாதையரான எனது தாத்தா திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி மற்றும் கொடூர கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியை நேரில் சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய திப்பு சுல்தான் குறித்து தேவையில்லாத கருத்துக்களை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் என்ற முறையில் முந்தைய ஆட்சியாளர் குறித்து பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருக்க கூடாது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவரது தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சுதந்திர போராட்டத்தில் திப்பு சுல்தானின் பங்களிப்பை மறைக்க காவி கட்சி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மைசூரில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக அவர் எவ்வாறு போராடினார் என்பதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது.

திப்பு சுல்தான் அணிந்திருந்த ஒரு மோதிரம் பிரிட்டன் சுத்தியலுக்கு அடியில் சென்றது. இதன் மதிப்பு 1 லட்சம் பிரிட்டன் பவுண்டுகளாகும். அதில் இந்து கடவுளான ராம் பெயர் இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் இறந்த பிறகு அந்த மோதிரத்தை பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவர் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.