திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழா கடந்த 9ம் தேதியன்று தொடங்கிய நிலையில், தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால பூஜையும், தீபாராதனையும் செய்யப்பட்டு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை சமேதராக தங்கசப்பரத்தில் முருகன் எழுந்தருளி வசந்த மண்டபத்தை வந்தடைவார். அங்கு அவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை சுற்றிவர, பின்னர் கோவிலுக்குள் அழைத்துச்செல்லப்படுவார். இன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட உடன், விஸ்வரூப தீபாராதனை நடத்தப்பட்டு, உதய மார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது.

வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நாளான விசாக தினத்தன்று (நாளை) 1 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் விஸ்வரூப தீபாராதனை நடத்தப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 2.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகமும் நடைபெற உள்ளது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை வந்தடைந்த உடன், அங்கு அவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். பின், இரவில் சுவாமி வசந்த மண்டபம் சென்று காட்சியருளி முனிகுமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை வந்தடைவார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவில் பங்கேற்பதற்காக, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் வாய்ப்பு உள்ளதால், கோவிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு பக்தர்கள் இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணிக்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1000 காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.