ஒரே நாளில் ரூ.6.28 கோடி காணிக்கை – சாதனை படைத்த திருப்பதி உண்டியல்

ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு நாளில் மட்டும் ரூ.6.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வியாழக்கிழமை செலுத்தப்பட்ட காணிக்கை ஆறு கோடியை எட்டியுள்ளது.

tirupati

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். தினமும் செலுத்தப்படும் காணிக்கை ஸ்ரீவாரி பக்தர்கள், தேவஸ்தானம் மற்றும் வங்கி ஊழியர்களால் எண்ணப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அந்த பணத்திற்கு கிடைக்கும் வட்டி மூலம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு நாளும் 12முறை உண்டியல் நிரம்பி வழிவதாக கூறும் தேவஸ்தானம் பக்தர்கள் காணிக்கை செலுத்த மாற்று உண்டியலை வைப்பதாக கூறுகிறது. இந்த உண்டியலில் பணம் மட்டுமின்றி விலை உயர்ந்த நகைகள், கற்கள், வீட்டு மற்றும் நில பத்திரங்களை பக்தர்கள் காணிக்கையாக போட்டு செல்கின்றனர். சில பெண்கள் தங்கள் தாலிகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர் என்று தேவஸ்தானம் கூறுகிறது.

ஏழுமலையான் கோயில் உண்டியலின் தினசரி வருமானம் ரூ.3 கோடியாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.6.28 கோடி காணிக்கை செலுத்தப்பட்டதாக தேவஸ்தானம் கணக்கு காட்டியுள்ளது. 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி செலுத்தப்பட்ட ரூ.5.73 கோடி தான் இதுவரை செலுத்தப்பட்ட காணிக்கைகளில் அதிகப்பட்டசமாக இருந்து வந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.1,100 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.