திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையையொட்டி மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார். ஏழுமலையானை மோகனி கோலத்தில் கண்ட பக்தர்கள் பக்திபரவசத்தில் திளைத்தனர்.

திருப்படி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இதையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள்  திருப்பதிக்குக் கொண்டுவரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், யானைகள் அணிவகுப்புடன், நாதஸ்வரம் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது.

ஆண்டாள் சூடித்தந்த மாலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்பட்டது.

திருமண வரம் தருவார் ஏழுமலையான் என்பதால் பல லட்சம் பேர் திருப்பதியில் குவிகின்றனர். புராண – இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம்.

பிரம்மோற்சவ நாட்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் அழகாய் அருள்பாலிக்கிறார்.  மோகினி அவதாரத்தில் வலம்வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை மேலோங்கும் என்பது ஐதிகம்.

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.