சென்னை,
ஜி.கே.வாசன் ஆக்கிரமித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக ஜி.கே.வாசன் கவலை அடைந்துள்ளார்.
ஜி.கே.மூப்பனார் காங்கிரஸை விட்டுப் பிரிந்து, தமாகா-வைத் தொடங்கியபோது, தமிழகத்தில் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகத்தை எங்களுக்குதான் சொந்தம் என்று கைப்பற்றியது தமாகா.
thirunavu
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து,  தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
‘அப்போது நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார்.
அந்த தேர்தல்களில் த.மா.கா., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
மூப்பனார் மறைவுக்குப்பிறகு,  தமாகா-வுக்குத் தலைமையேற்றார் ஜி.கே.வாசன். சில காலத்துக்குப்பிறகு டெல்லி தலைவர்கள் வாசனிடம் பேசியதால்,  கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர், தாய் கட்சியான காங்கிரசுடன் த.மா.கா.வை இணைத்தார்.
இதன் பலனாக அவருக்கு  மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.
அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என்று மீண்டும் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸை விட்டு வெளியேறி,  தமாகா-வை ஆரம்பித்தார்.
அப்போது அவருக்கு துணையாக இருந்த மாவட்ட செயலாளர்களுடன், அந்தந்த மாவட்ட காங்கிரஸ் அலுவல கத்தையும் கைப்பற்றினார். இது பிரச்சினையாகி விசாரணையும் நடைபெற்று வருகிறது.
gk-vasan
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசர் தமாகாவிடம் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கவும், அவர்கள் ஆக்கிரமித்துள்ள அலுவலகத்தை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து, தமாகா வசம் உள்ள அலுவலகங்கள் குறித்த விவரங்களையும் , விசாரணையில் உள்ள அலுவலகங்கள் விவரத்தையும் சேகரித்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக ஆர்.டி.ஓ. விசாரணையில் இருந்த வேலூர் அலுவலகத்தை தன் முயற்சியாலும், மாற்று கட்சி பிரமுகர் உதவியாலும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே சொந்தமாக்கியுள்ளார்.
அடுத்தபடியாக சட்ட ரீதியாக கடலூர் அலுவலகத்தையும் கோடிக்கணக்கில் உள்ள சொத்துகளையும் மீட்கத் திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக தங்களிடம் உள்ள அலுவலகங்கள் பறிபோய் விடுமோ என்று ஜி.கே.வாசன்  சங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.