திருச்சி:

ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இன்று தியாகி அருணாசலம் பிறந்த நாளையொட்டி,  திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள அவருடைய உருவச் சிலைக்கு திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,   “இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பாலியல் வன்புணர் வுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் அதனால்தான், ராகுல்காந்தி,  “ரேப் இன் இந்தியா” என  பேசினார்.

அவர் எதற்காகப் பேசினார்? அவர் பேச்சின் அர்த்தம் என்ன? என்பதைதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் பேசுவதை தனியாகப் பிரித்து அதற்கு ஒரு அர்த்தம் கற்பிக்கக் கூடாது என்று கூறியவர்,  அதற்காக அவர்  ‘மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறுவதுசிறுபிள்ளைத்தனமானது என காட்டமாக பாஜகவினருக்கு பதில் அளித்தார்.

மேலும்,  குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களிடையே  பாகுபாட்டை ஏற்படுத்துவதாக தான் உள்ளது என்று கூறியவர், நாட்டில் உள்ள இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் ஒதுக்குவதாக தான் இந்த சட்டம் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.