நெல்லை:

கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி இசக்கி முத்து என்பவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடும் விமர்சனத்துக்கு ஆளான கலெக்டர் சந்தீப் நந்துரி பதிலளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சுமார் 2 வாரங்கள் கழித்து பேஸ்புக் மூலம் கலெக்டர் வாய் திறந்துள்ளார். அந்த குடும்பத்தின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்ற ரீதியில் அவர் பதிலளித்துள்ளார்.

அதில், ‘‘இந்த சம்பத்துக்கு காரணமாக கூறப்படும் பெண் ஒரு மாதத்துக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஏற்கனவே அந்த குடும்பத்தினர் கடனை திருப்பி கொடுக்காதது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். அப்போதும் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை’’ என்று தெரிவித்தள்ளார்.

‘‘அந்த தம்பதி குழந்தைகளோடு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? கடன் சுமை அதிகரித்ததால் அதை திருப்பி செலுத்த அழுத்தம் ஏற்பட்டதாலா? அல்லது மிரட்டும் வகையில் தவறான முறையில் தீவைப்பு நடந்ததா? அல்லது இது போன்று தற்கொலை மிரட்டல் விடுத்தால் கடனை செலுத்த வேண்டியிரு க்காது என்று யாரோ தவறான வழிகாட்டியதாலா? இது போல் வேறு சில காரணங்கள் இருக்கிறதா?’’ என்று கலெக்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்த பதிவில், ‘‘அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் வந்து குவிகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது காவல் துறையையோ இதில் குறை கூற முடியாது. என்னால் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர் விசாரணைக்கு வர கோரி எழுத்துப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும்’’ என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்ப்பட்டதற்கு அவர் அளித்துள்ள பதிலில், ‘‘ அந்த நபரால் வரையப்பட்ட கார்ட்டூன் அவதூறாகவும் ஆபாசமாகவும் இருந்தது. நான் பல கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ச்சி அடை ந்திருக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை. படைப்புகளுக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் ஒரு வரையறை உள்ளது.

அடிப்படை ஆதாரமற்ற ஊழல் மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், ஆபாசமாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தகூடாது. பெருமையுடன் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த பணியில் இணைந்துள்ளேன். எனது மனசாட்சி தெளிவாக இருக்கும் சமயத்தில் பொய் குற்றச்சாட் டுக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.