சென்னையில் நாளை ‘திருப்பதி திருக்குடை’ கவுனி தாண்டுகிறது…!

சென்னை:

சென்னையில் நாளை  மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது. இதன் காரணமாக திருக்குடை செல்லும் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு திருக்குடைகள் எடுத்துச்செல்லப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலம்

ஆண்டுதோறும் 21 திருக்குடைகள்  உபய உற்சவ ஊர்வலமாக திருப்பதிக்கு  எடுத்துச்செல்லப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திருக்குடைகள் எடுத்துச்செல்லப்படும் உற்சவ விழா நாளை தொடங்குகிறது.

சென்னை பாரிமுனையில் உள்ள சென்னகேசவபெருமாள் கோயிலில் நாளை காலை திருக்குடைகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து  21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

இந்த  திருக்குடை ஊர்வலம் பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோடு வழியாக, சென்ட்ரல் அருகே உள்ள  வால்டாக்ஸ் ரோடு, யானைகவுனி மேம்பாலம், சூளை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம், ஓட்டேரி வழியாக சென்று நாள  இரவு அயனாவரம் சென்றடைகிறது. பின்னர் அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பி செல்கிறது.

நாளை திருக்குடை ஊர்வலம் செல்லவிருப்பதையொட்டி, திருக்குடை ஊர்வலம் செல்லும் பகுதிகளின்  பல இடங்களில் நாளை பிற்பகல் போக்குவரத்தும் மாற்றப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திருக்குடை ஊர்வலத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என்ற கரகோஷத்துடன்  ஊர்வலத்தில் உடன் செல்வர்.

கார்ட்டூன் கேலரி