கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, நாட்டின் நெம்பர் ஒன் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டு விட்டது.

ஊரடங்கால் கோயிலுக்கு மாதம் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோயில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ‘’ சம்பளத்தில் ஒரு பைசா குறைக்காமல் முழுதாக வழங்குவோம்’’ என திருப்பதி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எப்படி?
திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 12 ஆயிரம் கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளில் நிரந்தர டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அதில் இருந்து ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வட்டி வருகிறது.
அந்த வட்டி பணத்தை பெற்று கோயிலில் பணியாற்றும் 8 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் மற்றும் 15 ஆயிரம் தற்காலிக பணியாளர்களுக்கு 2 அல்லது 3 மாத சம்பளத்தை முழுதாக வழங்க முடிவு செய்துள்ளது, திருப்பதி தேவஸ்தானம்.