திருப்பதி:
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகவே கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு வெங்கடேச பெருமானை தரிசிக்க வேண்டுமானால் பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டும். ஆனால் மூன்று நாட்களுக்கு முன் ஒரு இளைஞர் பேண்ட் சர்ட் அணிந்தே கோயில் சந்நிதானம் வரை வந்துவிட்டார். அதுவும் கடும் பாதுகாப்பையும் மீறி உரிய அனுமதி சீட்டு இன்றி வி.ஐ.பி. வரிசையில் இவர் சென்றிருக்கிறார்.
 
தினந்தோறும் காலை நைவேத்தியத்திற்கு பிறகு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களது சிபாரிசு கடிதம் பெற்றவர்கள் தேவஸ்தான இணை செயல் அலுவலர் அல்லது அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் படி ரூ.500 கட்டணம் செலுத்தி விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் 35 வயது மதிக்கத்தக்க இந்த வாலிபர், பேண்ட், சட்டை அணிந்தபடி இந்த வரிசையில் வந்துவிட்டார். மேலும் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மட்டுமே சந்நிதானம் அருகில் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் மீறி பேண்ட் சட்டையில் சர்வ சாதாரணமாக வந்திருக்கிறார்.
கோயில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ, அந்த நபரை பார்த்து அதிர்ச்சியாகி விசாரித்தார்.  அவர் திருமலையில் சுவாமி படம், சுவாமி கயிறு விற்பனை செய்பவர் என தெரிந்தது.
விஐபி தரிசன வரிசையில் 3 இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் உள்ளது. மேலும் 4 இடங்களில் சோதனையும் நடக்கிறது.
ஆனால் டிக்கெட் இல்லாமலும், பாரம்பரிய உடை இல்லாமலும் ஒரு வாலிபர் இத்தனை சோதனைகளையும் தாண்டி எப்படி வந்தார் என விளக்கம் கேட்டும், பணியில் அலட்சியமாக இருந்த பாதுகாப்பு அலுவலர்கள் 4 பேருக்கு தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பாதுகாப்பு பணிகளில் இத்தனை அலட்சியப்போக்கா என்று பக்தர்கள் அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள்.