ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுந்த சிக்கல்: ஊழியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லை என தகவல்

ஐதராபாத் : ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட, ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியிருக்கிறது.

புகழ்பெற்ற திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கின் எதிரொலியாக கோயில் நடை அடைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 50 நாட்களாக கோயில் அடைக்கப்பட்டு இருக்கிறது. இந் நிலையில் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ. 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிரந்தர செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி செலவிடப்படும். ஆனால் இந்த தேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 300 கோடி செலவிடப்பட்டுவிட்டது என்றார்.

திருப்பதி கோயில் நிர்வாகத்திடம் 8 டன் தங்கம் கை இருப்பில் உள்ளது. பல்வேறு வங்கிகளில் ரூ.14,000 கோடி நிரந்தர வைப்புத் தொகையும் இருக்கிறது. ஆனால் இதில் எதையும் எடுக்காமல் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் திட்டமாக இருக்கிறது.