திருப்பூர்

முன்கூட்டியே வருமான வரி செலுத்தும் முறைக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்திய வருமான வரித்துறையின் வழக்கப்படி தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சென்ற வருட வருமான வரியின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டுக்கும் முன் கூட்டியே வரி செலுத்த வேண்டும்.    வருட இறுதியில் வருமான வரிக் கணக்கு அளிக்கும் போது அவர்கள் செலுத்த வேண்டிய வரியில் ஏற்கனவே செலுத்திய தொகை கழித்துக் கொள்ளப் படும்.   மீதம் செலுத்த வேண்டிய தொகையை அப்போது செலுத்த வேண்டும்

இந்த முறைக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளது.    இந்த சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் இது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்தக் கடிதத்தில், “முன் கூட்டியே வருமான வரி செலுத்தச் சொல்லி வருமன வரித்துறை எங்களுக்கு பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி வருகிறது.   அத்துடன் முந்தைய ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக முன்கூட்டியே வருமான வரியை செலுத்தச் சொல்லி நோட்டிஸ்களும் அனுப்பி வைத்துள்ளனர்.

எங்களுக்கு ஜிஎஸ்டியில் திரும்ப அளிக்க வேண்டிய தொகையான சுமார் ரூ.1200 கோடி இன்னும் அரசால் தரப்படவில்லை.   அப்படி இருக்க அரசு எங்களிடம் உடனடியாக வருமான வரியை முன்கூட்டியே செலுத்தச் சொல்வது எவ்வாறு சரி ஆகும்?   இந்த ரூ.1200 கோடி என்பது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே வர வேண்டிய தொகை ஆகும்.   மொத்தமுள்ள பின்னலாடை தொழிலதிபர்களுக்கும் சேர்ந்த்து கணக்கிட்டால் இந்தப் பணம் இன்னும் அதிகரிக்கும்.

தற்போதுள்ள நிலையில் மிகவும் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதனால் செலவுக்கு தேவையான ரொக்கப் பண சுழற்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.   ஆனால் அரசு பலமுறை நினைவூட்டியும் எங்களுக்கு வர வேண்டிய தொகையை தரவில்லை.    அத்துடன் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது என்பது அவரவர் விருப்பம்.   அது அவசியம் என எந்தச் சட்டமும் கூறவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.