பின்னலாடை : திருப்பூரை திணற வைக்கும் இலங்கையும் வங்க தேசமும்
திருப்பூர்
இலங்கை மற்றும் வங்க தேச வர்த்தகப் போட்டியில் திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் திணறி வருகிறது.
திருப்பூரில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கத்துக்குப் பிறகு அங்கு கொடி கட்டிப் பறந்த பின்னலாடை தொழில் சற்றே நசுங்கத் தொடங்கியது. மேலும் ஜிஎஸ்டி உள் வரியை திரும்ப தர மத்திய அரசு அதிக காலம் எடுத்துக் கொண்டது. இதனால் பல பெரிய தொழிலதிபர்களும் அவதிக்கு உள்ளாகினர். இவர்களுக்கு பணி புரியும் சிறிய மற்றும் குறும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்கூடங்களை மூடும் நிலை உண்டாகியது. பலர் வேலை இழந்தனர்.
தற்போது ஜிஎஸ்டி குறித்த குழப்பங்கள் கட்டுக்குள் வந்துள்ளன. மற்றும் ஜிஎஸ்டி உள்வரி தொகையும் திரும்ப அளிக்கப்பட்டு வருகின்றன. இது இங்குள்ள பின்னலாடை தொழிலதிபர்க்ளுக்கு சற்றே நிம்மதியை அளித்தது. உள்நாட்டுக் கொள்கை பாதிப்பில் இருந்து மீண்டு தொழிலை தொடங்கிய அவர்களுக்கு தற்போது வெளிநாடுகளில் இருந்து போட்டி உண்டாகி உள்ளது.
இந்தப் போட்டி நமது அண்டை நாடுகளான இலங்கை மற்றும் வங்கதேசத்திடம் இருந்து வந்துள்ளது. இந்த நாடுகளில் ஏற்றுமதி தீர்வை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த நாடுகள் தங்கள் பின்னலாடைகளை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதி தீர்வை ரத்து செய்யப் படவில்லை. அத்துடன் அதிக விகிதத்தில் தீர்வை விதிக்கப்படுகிறது. இதனால் இந்திய பொருட்கள் மற்ற நாடுகளை விட விலை அதிகமாக உள்ளன.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத் தலைவர், “வருடத்துக்கு 10% அதிகரித்து வந்த பின்னலாடை உற்பத்தி கடந்த 2017 முதல் வருடத்துக்கு 7% குறைந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2100 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு சுமார் 15000 பேர் வேலை இழந்துள்ளனர். இது தவிர பல பெரிய தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஏற்றுமதி தீர்வையை முழுமையாக ரத்து செய்தால் மட்டும் நமது ஆடைகளின் விலை குறைந்து ஏற்றுமதி மீண்டும் பழைய நிலையை அடையும். அதுவும் உடனடியாக அரசு இந்த ஏற்றுமதி தீர்வை ரத்து செய்ய வேண்டும். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வேறு இடங்களில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினால் மீண்டும் அவர்களை நம்மிடம் ஏற்றுமதி செய்ய வைப்பது நடக்காத ஒன்றாகும். எனவே அரசின் விரைவு நடவடிக்கை உடனடித் தேவை ஆகும்” என தெரிவித்துள்ளார்.