தேசிய கராத்தே போட்டிக்கு தையல் தொழிலாளி மகள் தேர்வாகி சாதனை

திருப்பூர் தையல் தொழிலாளி மகள், தேசிய கராத்தே போட்டிக்கு தேர்வாகி சாதனை புரிந்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி வாய்க்கால் மேடு திருப்பூரான்தோட்டத்தைச் சேர்ந்த தம்பதி மலேஸ்வரன்-சாந்திரதேவி. இருவரும் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

karate

இவர்களின் 3வது மகள் ரம்யா, திருப்பூர் பாரதி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று, மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள ‘ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ தேசியப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது ” 3 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி எடுத்து வருகிறேன். அப்பாவின் நண்பரின் குழந்தை கராத்தே கற்று, அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அலைபேசியில் அப்பா வைத்திருப்பதை யதார்த்தமாக ஒருநாள் பார்க்க நேர்ந்தது. அதன்பின்னரே கராத்தே கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். போட்டி நடைபெறும் போதும் அதிகாலை 3 மணி முதல் பயிற்சி எடுக்கத் தொடங்கி விடுவேன். சிரமமான சூழலுக்கு இடையேதான் என்னை வகுப்புக்கு அனுப்பி வருகிறார்கள். கற்றுக்கொள்ள தொடங்கியதும் சாதிக்க வேண்டுமென நினைத்தேன் “ என்று சிறுமி கூறியுள்ளார்.