திருப்பூர் மேயர் படிப்பு குறித்து ஆராய கலெக்டருக்கு உத்தரவு

விசாலாட்சி
விசாலாட்சி

சென்னை,: திருப்பூர் மேயர் விசாலாட்சி , பி.ஏ., படித்தவரா என்பது குறித்த அறிக்கையை, இரண்டு மாதங்களில், மாநில தேர்தல் அதிகாரிக்கு அனுப்பும் படி, மாவட்ட  ஆட்சியருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், செந்துார் கார்டன் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் பாசு.மணிவண்ணன், திருப்பூர் மேயர் விசாலாட்சியின் கல்வி குறித்த சந்தேகத்தை எழுப்பி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“உள்ளாட்சி தேர்தலில், திருப்பூரில், விசாலாட்சி என்பவர் போட்டியிட்டார். பிரசாரத்தின் போது வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்கள், பத்திரிகை செய்திகளில், ‘பி.ஏ., பட்டதாரி’ என தன்னை குறிப்பிட்டுள்ளார். அவர், பி.ஏ., பட்டம் பெற்றவர்
என்பதை நம்பி, ஓட்டு போட்டேன். தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி மேயராக விசாலாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவர், 7ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்தது .படித்த ஒருவரை தேர்வு செய்ததாக நம்பிய நாங்கள், ஏமாற்றப்பட்டு விட்டோம்.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட கலெக்டருக்கும் விரிவான மனு அனுப்பினேன்.
மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்; இதுவரை விசாரணை நடத்தவில்லை.

எனவே, மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும். அதன்பின், உரிய
உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”  இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

பாசு. மணிவண்ணன்
பாசு. மணிவண்ணன்

மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு வருமாறு:

திருப்பூர் மேயர் விசாலாட்சியின் கல்வித்தகுதி குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை செய்ய வேண்டும் என  2014 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்  ஒன்றரை ஆண்டுகளாகியும், மனுதாரருக்கு முடிவை தெரிவிக்காதது எங்களுக்கு
ஆச்சரியம் அளிக்கிறது.

மேயரின் கல்வித்தகுதி குறித்து கண்டுபிடிக்க, நிச்சயம் இவ்வளவு நாட்கள் ஆகாது. எனவே, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கவில்லை என்றால், இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அனுப்ப, மாவட்ட கலெக்டர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, சட்டப்படி, மாநில தேர்தல் அதிகாரி செயல்பட வேண்டும்; மனுதாரருக்கும், முடிவை தெரியப்படுத்த வேண்டும்” இவ்வாறு, ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.