‘திருவஹீந்திரபுரம்’108 திவ்ய தேசங்களில் ஒன்று…

இது . கடலூரில் இருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் கொடில நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது,

இது பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம், பரஹன் நாரதீய புராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலமாகும்.

இது நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார் அருளும் திருவஹீந்திரபுரம்:மிகவும் சிறப்புப் பெற்றது.. தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று.

அஹீந்த்ர என்றால் ஆதிசேஷன் என்று அர்த்தம்,

ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

இந்த திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. இத்தலத்தில் தேவநாதப் பெருமாள் அருளும் ஆலயம் ஒன்றும், அதன் எதிரே மலை மீது ஹயக்ரீவர் ஆலயம் ஒன்று மாக இரண்டு கோவில்களில் உள்ளது.

கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகள் புகழ்பெற்றவை … பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து  வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்ல தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது.ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.

தேவநாதப் பெருமாளாய், ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோ லத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இத்தல இறைவனை, திருப்பதி ஏழுமலையானாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் வேண்டு தலை இங்கேயே செலுத்துகின்றனர்.

தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள்

பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் நிர்மாணித்த தலம் இது என்று புராணங்கள் எடுத்து ரைக்கின்றன. இந்த தலத்தில் உள்ள பெருமாளுக்கு ஆதிசேஷன் பாதாள கங்கையையும், கருடன் விரஜா தீர்த்தத்தையும் கொண்டு வந்து தாகம் தீர்த்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் பாதாள கங்கை சேஷ தீர்த்தம் என்றும், விரஜா தீர்த்தம் கொடில நதி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சேஷ தீர்த்தம் பெருமாளின் திருமஞ்ச னத்திற்கும், கொடில தீர்த்தம் பெருமாளின் நிவேதனம் தயாரிக்க மடப்பள்ளியிலும் பயன்படுத்தப் படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் நாக தோஷம் அகலும்.

குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் தோசம் நிவர்த்தி ஆகும்.

ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையான ஆஷாட மலை மருத்துவ குணம் நிறைந்தது.. ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் சிறப்புப் பெற்றவை.

பார் அனைத்தையும் காக்கும் பெருமை பெற்றவள் என்பதால் பார்கவி என்ற திருநாமமும் உண்டு. இங்குள்ள உற்சவருக்கு “மூவராகிய ஒருவன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரம்மாவுக்குரிய தாமரை, சிவபெருமானின் நெற்றிக்கண், தலையில் ஜடாமுடி, கையில் சங்கு,சக்கரம் ஏந்தி மும்மூர்த்திகளின் அம்சமாக வீற்றிருக்கிறார்.

நாக தோஷம் தீர, பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு இங்குள்ள கிணற்றில் பால் தெளிக்க லாம்.  இதுவே ஆதிசேஷனின் சேஷ தீர்த்தமாகும். இது ஆலயத்தின் வெளிச் சுவரின் வடக்கே உள்ளது. இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தின் தென்மேற்கில் ஹேமாம்புஜவல்லி தாயார் அருள்பாலிக் கிறார். வடமேற்கில் சயனப் பெருமாள் மற்றும் ராமபிரானுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.

தேவநாதப் பெருமாள் சன்னிதி திருச்சுற்றில் விநாயகர் அருள்புரிகிறார். வில்வ மரமே தல விருட்சமாக இருக்கிறது. இத்தல மூலவரின் எதிரில் கருடாழ்வார் கைகளைக் கட்டிக் கொண்டும், ராமர் சன்னிதியில் ஆஞ்சநேயர் வாயைப் பொத்தியபடியும் நிற்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்கிறார்கள்.

தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக் கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர்.

அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது. தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம்.

ராஜகோபாலன் சன்னிதி, ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சன்னிதியும் இருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர், தேவநாதப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கிறார். தேவநாதப் பெருமாளை ‘தாழக் கோவிலில்’ வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். ‘அவ்ஷதகிரி’ என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன. இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.
விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

பரிமுகக் கடவுள் எனும் ஹயக்ரீவர்,ஞானத்தின் இருப்பிடமாகத்திகழ்பவர். கலைமகளின் குரு என்று போற்றப்படுபவர். இந்தப் பரிமுகக்கடவுளை குழந்தைகள் வணங்கி வந்தால், அச்சம் நீங்கி,பரீட்சை நன்கு எழுதி, நல்ல மதிபெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவார்கள்

ஹயக்ரீவர் அவதாரம்,தேவலோகத்தில் ஏற்பட்டதாகும். நான்கு வேதங்களையும், அரக்கன் திருடிச் செல்ல நான்முகம் பதரி பயந்து நாராயணனை அடிபணிய மகா விஷ்ணு குதிரை வடிவில் வந்த அரக்கனை, குதிரை வடிவம் தாங்கிச் கொன்று வேதங்களை மீட்டு நான்முகனுக்கு அளித்து படைப்புத் தொழிலைத் தொடங்க வைத்தார்.

 

இது தான் ஹயக்ரீவர் அவதாரம் ஆகும். சாதாரணமாக, தெய்வங்களுக்கு மலர்மாலைகள் சமர்பிக்கப்படும். திருவஹீந்திரபுரத்திலுள்ள லக்ஷ்மி ஹயக்ர்ரிவருக்கு ஏலக்காய் மாலைகள் தருகிறார்கள். இவருக்கு தேனை நிவேதனம் செய்து தருகிறார்கள்.

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும். இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வியாழக்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவருக்கு பூஜை செய்து, இனிப்பு சேர்த்த கடலைப்பருப்பு சுண்டலை நிவேதனம் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்மை பயக்கும். மூன்று அல்லது ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் தேர்வில் தேர்ச்சி, உத்யோக உயர்வு உத்யோகம் இவை எல்லாம் கண்டிப்பாக கிடைக்கும்.

இந்த தலத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக் குள்ளும், சுவாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக் குள்ளும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பானகம் நைவேத்தியம் செய்தால் வறுமை, கடன் தொல்லை அகலும். செவ்வாய் தோஷமும் விலகும். இவ்வாலயத்தில் தேசிகனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது

வெள்ளிக்கிழமைகளில் ஹேமாம்புஜ வல்லி தாயாருக்கு, மாலை வேளை யில் வில்வ அர்ச்சனை செய்து வழி பட்டால் பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையும். வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.