பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்: உயர்நீதி மன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி

சென்னை:

காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்குள் (2019, பிப்ரவரி 7) திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர், காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று  மதுரை உயர்நீதி மன்ற கிளை யில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே நடைபெற்ற  இந்த மனுமீதான விசாரணையின்போது,   காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்துக்கு  எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி விடுத்திருந்தது.

மேலும், இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும்,   2 தொகுதிக் கான தேர்தல் கால அட்டவணை ஏதும் இருந்தால் அதனை நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 26ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  திருவாரூர் தொகுதியில் நின்று வென்ற திமுக தலைவர் கருணாநிதி காலாமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்தத் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அதன்படி , பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து தேதி அறிவிக்க இயலாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.