உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை டில்லி சிறப்பு உயர்நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும், அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமில்லாது, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. கடந்த ஏப்ரல், 2018ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் உன்னாவில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வந்தது. இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் மர்ம மரணம் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பினர். அச்சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.

இவ்விவாகரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணும் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டதோடு, டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு ஒன்றை ஏற்படுத்தி, 45 நாட்களுக்கு வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இவ்வழக்கு லக்னோ உயர்நீதிமன்றத்தில் இருந்து டில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், நேற்று பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும் தீர்ப்பை இன்றைக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளியாக குல்தீப் செங்கார் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய பெண்ணின் உறவினர்கள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்தது.தொடர்பான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.