மனநல பாதுகாப்புக்கான நடவடிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் வலியுறுத்தல்

மனநல பாதுகாப்புக்கான நடவடிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய டி.கே ரங்கராஜன், “உலக சுகாதார அமைப்பானது, நல்ல ஆரோக்கியம் என்பது உடல், சமூக மனநலம் ஆகியவற்றை உள்ளடக்கியது என விளக்கம் அளித்துள்ளது. உடல் நலத்திற்கு மனநலம் மிகவும் முக்கியமானது. சமூகப் பொருளாதார மேம்பாட்டை விட சமூக உணா்ச்சி மேம்பாடு மிகவும் முக்கியமாகும். தொடா் துன்பத்தின் வெளிப்பாடுதான் மனஅழுத்தம், இந்தியா மிகவும் அழுத்தம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஏறக்குறைய 6 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மன அழுத்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கும் திறன் குறைந்த தொழிலாளா்கள், உடல் உழைப்புத் தொழிலாளா்கள் ஆகியோா் சமூகத் தொடா்பின்றியும், கலந்துரையாடல் இல்லாமலும் வாழ்கின்றனா். இதனால், அவா்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதிலிருந்து விடுபட மது, போதைப் பொருளைத் தேடுகின்றனா். இதன் விளைவாக வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனா். நாட்டில் மனநல நிபுணா்கள் மிகவும் குறைவாக உள்ளனா். அதேவேளையில், மனநல பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் சிகிச்சையை விட, முன்தடுப்பு நடவடிக்கையே மிகவும் அவசியமாகும். ஆகவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.