புதுடெல்லி: ‍கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளதற்கு, தேர்தல் கமிஷனில் தமது கட்சி புகாரளிக்கும் என்று கூறியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரக் ஓ பிரைன்.

மேற்குவங்கத்தில், அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தற்போது பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி பணிகள் துவங்கியுள்ளதையடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது.

இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று குற்றம் சாட்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகாரளிக்கவுள்ளது. தற்போது, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜக இந்த விதிமுறைகளை மீறும் வகையில் செயல்பட்டுள்ளது. இதை எதிர்த்துதான் திரிணாமுல் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளது.