பா.ஜ.க. விற்கு தாவிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பா.ஜ.க. சமூகவலைத்தள வீடியோ

 

அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க வில் ஐக்கியமான திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி, தனது தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி.யை பா.ஜ.க. விற்கு கூட்டிவந்திருக்கிறார்.

மேற்கு வங்க அரசியல் களத்தில் அனலை கிளம்பியுள்ள இந்த கட்சி தாவல் விவகாரம், மம்தா பானெர்ஜீ வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. க்கள் இத்தனை பேர் ஒரே நேரத்தில் பா.ஜ.க. விற்கு தாவியதால் திக்குமுக்காடிப்போன அமித் ஷா, “இந்த தேர்தலுடன் மம்தா பானெர்ஜீ-யின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது, தேர்தலுக்கு முன் மம்தா தனிமரமாக நிற்பார்” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு இதே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பத்திரிகையான ‘நாரதா’ நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் புலனாய்வில், ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக முடிவெடுக்க லஞ்சம் வாங்கிய விவகாரம் கேமராவில் ரகசியமாக படமாக்கப்பட்டது. இந்த வீடியோவில் சுவேந்து அதிகாரியும் கையும் களவுமாக சிக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து, அவர் மீது மத்திய பா.ஜ.க. அரசு வழக்கு தொடர்ந்தது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் போடப்பட்ட வழக்குகளை சுவேந்து அதிகாரி சந்தித்து வருகிறார்.

இந்த ரகசிய விடியோவை தனது யூ-டியூப், முகநூல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் 2016ல் பகிர்ந்த பா.ஜ.க., தற்போது சுவேந்து அதிகாரி பா.ஜ.க. வில் இணைந்ததை அடுத்து தனது யூ-டியூபில் இருந்து நீக்கிவிட்டது.

இருந்தபோதும், தனது முகநூல் பக்கத்தில் உள்ள பதிவை நீக்காமல் உள்ளது. பா.ஜ.க. வின் இந்த இரட்டை வேட நாடகத்தை சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், தனக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சிக்கிய முன்னாள் ரயில்வே அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான முகுல் ராய், 2017 ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் ஐக்கியமானார். இவருக்கு பா.ஜ.க. வின் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிக்கிய எம்.பி. க்கள் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகர் இதுவரை அனுமதி வழங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. வில் நேற்று இணைந்த சுவேந்து அதிகாரி “எனக்கும் அமித் ஷா வுக்கும் இடையில் நீண்டகால தொடர்பு உள்ளது, பா.ஜ.க.வில் உள்ளவர்கள் என்னை சகோதரன் போலவே பார்க்கின்றனர். நான் கொரோனாவால் பாதிக்க பட்டபோது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் என்னை நலம் விசாரிக்கவில்லை, ஆனால், அமித் ஷா இருமுறை என்னை தொடர்பு கொண்டு என் நலம் விசாரித்தார் ” என்று அமித் ஷா புகழ் பாடினார்.