அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர தலைமை நிர்வாக குழு தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் இன்று நவம்பர் 8 அன்று தலைமைகயத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் (பொறுப்பு) முனைவர் ஹாஜா கனி, பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்குக் கொண்டர். இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

450 ஆண்டுக் காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை போன்றில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமையியல் சட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அமையும் என்று நம்புகிறோம்.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

1949 டிசம்பர் 22-23 இரவில் பாபர் பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே சிலைகள் வைத்த தருணத்திலும், 1986 பிப்ரவரி 1 அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த வழக்கில் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் பாபர் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வழிப்பாட்டிற்கு அனுமதி அளித்துத் தீர்ப்பு வழங்கிய வேளையிலும், 1992 டிசம்பரில் பாபர் பள்ளிவாசல் வளாகத்தில் எந்தவொரு கரசேவையும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்த போதினும் அதனை மீறி டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசலை வன்முறை கும்பல் இடித்து தரைமட்டமாக்கி நிலையிலும் முஸ்லிம் சமுதாயம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து சட்டம் ஒழுங்கிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைதி காத்தது என்பதே வரலாறு.

டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த போதினும் நீதிமன்றத்தின் உத்தரவைப் புறந்தள்ளிவிட்டு பாஜக தலைவர் எல் கே அத்வானி தலைமையிலான வன்முறை கூட்டம் பாபர் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கியதுடன் இந்திய முழுவதும் கலவரத்தில் சங் பரிவார் அமைப்பினர் தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதே வரலாறாக இருக்கின்றது. இச்சூழலில் பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பைத் தந்தாலும் அமைதி காக்க வேண்டுமென அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சட்டத்தின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் முஸ்லிம் சமுதாயம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும் என்று முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது. தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: allahabad high court, Ayodhya Land Dispute, Babri Masjid, chief justice, india, Manithaneya Makkal Katchi, MH Jawahirullah, Ramjanma Bhoomi, Ranjan Gogoi, supreme court, TMMK, Uttar Pradesh
-=-