காவிரி பிரச்சினை: நாளை நடிகர் சங்க கூட்டம்! தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம்…?

 

சென்னை:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தண்ணீர் திறந்துவிட  வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு  மனு தாக்கல் செய்தது. மனுவை  விசாரித்த சுப்ரீம் கோர்ட் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு 10 நாட்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

1kanndarசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிட்டதற்கு ஆதரவு தெரிவித்து  கன்னட நடிகர் நடிகைகளும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சமுக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? ‘கபாலி ‘ ரஜினிகாந்த் என்ன சொல்கிறார் என்று ஆளாளுக்கு கமென்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இப்போதாவது, ரஜினிக்காந்த்தும், தமிழக திரைத்துறையினரும் தமது இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும்.  உச்சநீதிமன்றத்துக்கு ஆதரவாக பேச முன்வர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பெங்களூரில்  கன்னட சினிமா நட்சத்திரங்களின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், ரமேஷ் அரவிந்த், ஜக்கேஷ், உபேந்திரா, நடிகைகள் தாரா, ஸ்ருதி, ராகினி திவேதி, பாரதி விஷ்ணுவர்த்தன், லீலாவதி உள்ளிட்டோர் பங்கேற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசியுள்ளனர்.

இதற்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. நாளை  மாலை 4 மணி அளவில் நடைபெறும்  கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 24 பேரும் தவறாது கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாளைய கூட்டத்தில்,  காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. கர்நாடகாவில் அங்குள்ள நடிகர்கள் கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதுபோல்,  தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழகத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும்  என தெரிகிறது..

மேலும்,  நடிகர் சங்க புதிய கட்டிடத்தை விரைவாக கட்டுவது, சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு எதிராக பிரச்சனை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்பன உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும், கூட்டத்தில் நடிகர் சங்க வரவு-செலவு தாக்கல் செய்யப்பட்டு செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.