சென்னை:

மிழகத்திற்கு  தண்ணீர் வழங்கி வரும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு பல்வேறு தடுப்பனைகளை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் தலைத்தூக்கி வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளாகி உள்ள பாலாற்று பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இன்று மாலை 3 மணிக்கு தமிழக, ஆந்திர அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கேரளாவுடன்முல்லை பெரியாறு பிரச்சினை, கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை போன்றவை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது பாலாறு பிரச்சினையும் விசுவரூபம் எடுத்து வருகிறது.

தமிழக, ஆந்திர, கர்நாடக  மாநிலங்களுக்கு இடையே பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு 93 கி.மீ. கர்நாடகத்திலும், 33 கி.மீ. ஆந்திரத்திலும், 225 கி.மீ. தமிழகத்தி லும் பாய்கிறது. எனவே, பாலாற்று நீரில் தமிழகத்துக்கு அதிக உரிமை உள்ளது.

சென்னை உள்பட வட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாலாறு உள்ளது. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் பாலாற்று நீரை நம்பியே உள்ளது.  அதுபோல, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் மற்றும் குடிநீருக்கும் பாலாற்று நீரை நம்பி யுள்ளது.

இந்த விவகாரத்தில், 1892-ம் ஆண்டு ஏற்பட்ட மெட்ராஸ் – மைசூர் ஒப்பந்தப்படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பாலாற்று நீரை திசை மாற்றவோ, தேக்கவோ கூடாது.

ஆனால், ஒப்பந்தத்தை   மீறி பல்வேறு தடுப்பணை களை ஆந்திரம் கட்டியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த 10-2-2006-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. ஆனால் அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆந்திர அரசு  தடுப்பணைகளின்  உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இதனால் தமிழ கத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் உள்ளது.

இந்த சூழலில் இன்று மாலை 3 மணிக்கு ஆந்திர, தமிழக அதிகாரிகள் இடையே பாலாறு பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்தையின்போது இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படுமா அல்லது காவிரி, முல்லைப்பெரியார் போல சிக்கல்களை உருவாக்குமா என்பது என்பது போகப்போகத் தெரிய வரும்.

கர்நாடக மாநிலம் கோலாரில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் வழியாக வேலூர் மாவட்டத்தில் நுழைந்து தமிழகத்தில் 222 கி.மீ. தூரத்திற்குப் பாய்கிறது.