சென்னை

நேற்று அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரிய  நிலையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

விரைவில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன.   தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.   அவ்வகையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று அதிமுக விருப்ப மனு அளிக்கக் கோரிக்கை விடுத்திருந்தது.  அவ்வகையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் விருப்ப மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

நேற்று திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 17 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அண்ணா அறிவாலயத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விண்ணப்ப மனுக்களை வரும் 24 ஆம் தேதி வரை அளிக்கலாம் என அறிவித்துள்ள திமுக விண்ணப்பக் கட்டணமாக ரூ.25000 எனவும் மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.15000 எனவும் தெரிவித்துள்ளது.

அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா பிறந்த நாளான 24 ஆம் தேதி முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்கள் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.   இந்த மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்துக்கு ரூ.15000, புதுச்சேரிக்கு ரூ.5000 மற்றும் கேரளாவுக்கு ரூ.2000 என விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 21 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ரூ.25000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என அக்கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.   மேலும் ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் மனு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.  குறிப்பாகக் கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் விருப்ப மனு அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ள கமலஹாசன் விண்ணப்பம் தேர்வானாலும் ஆகவில்லை என்றாலும் கட்டணம் திருப்பி தர மாட்டாது எனவும் அறிவித்துள்ளார்.