சென்னை

நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் வழங்கப்பட்டது.  அதன் மீதான விவாதம் மார்ச் 19 முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது.   அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டது.

துறை ரீதியான மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடத்த வேண்டி உள்ளதால் நாளை முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளது.   ஒவ்வொரு நாளும் எந்தெந்த துறை மீதான மானியம் குறித்த விவாதம் நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.   முதலில் 1 மணி நேரம் கேள்வி நேரம் நடக்கும் எனவும் அதன் பிறகு விவாதம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு, குடிநீர் பிரச்னை,  குட்கா ஊழல், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.   இதனால் சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தை ஒட்டி தலைமை செயலகத்தை சுற்றி பலத்த காவல்துறை கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   எதிர்க்கட்சிகள் எந்த ஒரு போராட்டமும் செய்யாமல் தடுப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.