சென்னை

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி புகார் அளித்த 6 பேருக்கு விளக்கம் அளிக்குமாறு சட்டப்பேரவை செயலர் க்டிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர். சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் 11 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும்  அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்

அதையொட்டி 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் பேரவைத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், “உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. எனவே ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள்.மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை” என முதல்வர் கூறி உள்ளார்.

இதன் அடிப்படையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள். மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.