சென்னை:

மிழக சட்டப்பேரவையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நோட்டிஸ்  கொடுத்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அவையை ஒத்தி வைத்த்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை நிராகரித்த சபாநாயகர் தனபால்,  கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி தரப்படுகிறது என்றும், ஆனால், ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு அனுமதி கிடையாது என்று கூறினார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என சபாநாயகர் ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், தி.மு.கவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி இல்லை என்றும் இந்த  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தி.மு.கவினர் பேச அனுமதிக்கப்படுவர் என்று கூறினார் சபாநாயகர்.

உடனே எழுந்த துரைமுருகன்,  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலில் ஸ்டாலினை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது,  சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் தான் முதலில் பேச அழைக்கப்படுவர்  என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய துரைமுருகன், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்)  முதலில் எதிர்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உள்ள விவகாரங்களை நேரமில்லா நேரத்தில் பேச முடியாது என்று நிராகரித்தார்.

இதையடுத்து  சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.