சென்னை

மிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் போது பட்டாசுகள் வெடித்ததற்காக 534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.   வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் விழாவில் எந்த ஒரு ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இருக்கக் கூடாது என பார் கவுன்சில் அறிவித்திருந்தது.

ஆயினும் இந்த விழாவில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.   அது மட்டுமின்றி பட்டாசுகள் வெடிப்பதும் ஆரவாரம் செய்வதும் நிகழ்வின் போது நடந்துள்ளன.,    இதை ஒட்டி பார் கவுன்சிலுக்கு புகார்கள் வந்துள்ளன.   அந்த புகார்களை விசாரித்த பார் கவுன்சில் இன்று முடிவை அறிவித்தது.

தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சில், “வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் விழாவில் எவ்வித ஆடம்பரமும் கூடாது என அறிவிக்கப்பட்டது.   அதற்கு வழக்கறிஞர்களும் ஒப்புதல் அளித்தனர்.   ஆயினும் இந்த நிகழ்ச்சியில் சுவரொட்டிகள் ஒட்டுவது, பட்டாசு வெடிப்பது,  ஆரவாரம் செய்வது ஆகியவை நிகழ்ந்துள்ளது.

ஆகவே இந்த 534 வழக்கறிஞரகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.   இந்த தொகை தமிழக முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும்.

அத்துடன் இனி இவ்வாறு சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது ஆரவாரம் செய்வது ஆகியவைகளில் ஈடுபடுவர்களுக்கு ஆறு மாதம் வழக்கறிஞராக பணியாற்ற  இடைக்காலத் தடை விதிக்கப்படும்” என அறிவித்துள்ளது.