சிஏஏ சட்டத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி! தமிழக பாஜக சவால்

சென்னை:

சிஏஏ சட்டத்தால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்  தமிழக பாஜக சார்பில் சவால் விடப்பட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த சட்டத்தால், இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு மதத்தினருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும், அதை ஏற்க மறுத்து, சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  CAA-சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு  என பாஜகவினர் தமிழகம் முழுவதும்  சுவரொட்டி விளம்பரம் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளர், குமாரப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.தங்கவேல் என்பவர் பெயரில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

அதில், இந்திய  குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) இந்தியக் குடிமக்களில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதை நிருபித்தால் ஒரு கோடி ரூபாய்  பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.