திருத்தணி: தமிழக பாஜக நடத்தும் வெற்றிவேல் யாத்திரை தொடங்க திருவள்ளூர் கலெக்டர் தடை போட்டிருந்த நிலையில், தடையைமீறி வெற்றிவேல் யாத்திரை  நடைபெறும் என அறிவித்த தமிழக பாஜக தலைவர் முருகன், சென்னையில் இருந்து வேலூடன் யாத்திரையாக திருத்தணி சென்றார்.  அவரது காருடன் ஏராளமான கார்களும், காவல்துறையினர் சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாஜக யாத்திரையுடன் பாதுகாப்புக்கு காவல்துறையினர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசம்  குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட அவதூறு வீடியோ இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஏராளமான வழக்குகள்தொடரப்பட்ட நிலையில், கறுப்பர் கூட்டத்தின் யுடியூப் சேனல் தடை செய்யப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டனர்.   இதையடுத்து, கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டத்தினருக்கு பின்புலத்தில் இருந்து இயக்கி வரும் அரசியல் கட்சியினரையும்  கைது செய்ய வலியுறுத்தி,  தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்   திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை  கையில் வேலுடன் ‘வெற்றிவேல் யாத்திரை’ மேற்கொள்ள போவதாக அறிவித்தார். அதன்படி, இன்று யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழகஅரசு அனுமதி வழங்காது என நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில்,  திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறையும்,  அறிவித்தது.

ஆனால்,  திட்டமிட்டபடி வெற்றிவேல் யாத்திரை  நடைபெறும் என அறிவித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசும்போது,  கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை, அதன் அடிப்படையிலேயே திருத்தணிக்கு வந்தேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார். அதைத்தொடர்ந்து  சென்னையில் இருந்து வெற்றிவேல யாத்திரை தொடங்கியது.

அவரது வாகனத்துடன் ஏராளமான வாகனங்களும், மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி சென்றது.  பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்காக கூடுதல் கமிஷனர் அருண், இரண்டு இணை கமிஷனர்கள், மூன்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதுபோல,  திருத்தணியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   இதையடுத்து,  பா.ஜ.க. துணைத்தலைவர் கே.எஸ். நரேந்திரன் தலைமையில் 30 பேர் திருத்தணி பைபாஸ் கூட்டு சாலையில் கூடியுள்ளனர். முருகனை வழிபட்டுவிட்டு நிச்சயமாக யாத்திரையை தொடங்குவோம் என நரேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து  திருத்தணி நோக்கி செல்லும் யாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாஜக யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு  பொய் சொன்னதா  என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அல்லது, ஊர்வலம் செல்ல சிறப்பு அனுமதி ஏதேனும் கொடுக்கப்பட்டதா ? கைது செய்ய வேண்டிய காவலர்களும் உடன் பயணிப்பது ஏன் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.