கேரள முழு கடையடைப்பு : தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

ன்னியாகுமரி

பாஜக அழைப்பு விடுத்துள்ள கேரள கடையடைப்பை ஒட்டி தமிழக பேருந்துகள்எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சபரிமலையில் நீண்ட நாட்களாக இளம்பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் மலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநிலம் எங்கும் போராட்டம் வெடித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கேரள அரசு பெரிதும் முயன்று வருகிறது. ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இது பாஜகவினரின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

தடியடி சம்பவத்தை கண்டித்து இன்று கேரளா முழுவதும் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அதனால் கேரள மாநிலத்தில் பல இடங்களில் போக்குவரத்து இல்லாமலும் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடியும் உள்ளது.

பாதுகாப்பு கருதி தமிழக அரசு பேருந்துகளை கேரள மாநிலத்துக்குள் செல்ல வேண்டாம் என தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதை ஒட்டி கேரள மாநில எல்லையான களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.