திருச்சி: வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்களை தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவரும் சில விமானங்கள் திருச்சிக்கு திருப்பிவிடப்படும் என்று மாநில அரசு அறிவித்ததையடுத்து, தமிழகத்தின் பல மத்திய மாவட்டங்கள், தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் முதல், சென்னை வரும் விமானங்களில் சில, திருச்சிக்கு திருப்பி விடப்படும். இதனையடுத்து, பல மத்திய மாவட்டங்களின் நிர்வாகங்கள், தனிமைப்படுத்தும் வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
திருச்சி மாவட்டத்தில், கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 5000 படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 600 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
ஒட்டுமொத்தமாக, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தமாக 15000 பயணிகளைக் தனிமைப்படுத்திக் கையாள்வதற்கான வசதிகள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.