அமெரிக்க தேர்தலில் வென்ற பிடன், கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் எடப்பாடி வாழ்த்து: தமிழகத்துக்கு பெருமை சேர்த்ததாக புகழாரம்

சென்னை: அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிசுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதே போல, துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

இருவருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந் நிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.